திங்கள், 18 மே, 2015

நான், என் காதல், என் காதலிகள் - பகுதி 10 : கங்கணம் (நாவல்) - பெருமாள்முருகன்

நான் வாசிக்கும் நான்காவது பெருமாள்முருகன் நாவல் இது. பெரும் வம்பு வழக்குகளக்குள்ளாகி, இலக்கியமும் வேணாம் மண்ணும் வேணாம் என்று முடிவெடுத்து, தன்னில் வாழ்ந்துவந்த படைப்பாளி இறந்துவிட்டதாக அறிக்கை விட்டுவிட்டு, எழுத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ளுமளவுக்கு பெருமாள்முருகனைத் துரத்திய மாதொருபாகன்தான் முதலில் வாசித்தது, சர்ச்சைகள் எல்லாம் கிளம்பும் முன். பிறகு பூக்குழி. அதன்பிறகு ஆளண்டாப்பட்சி. நான்காவதாக இப்போது கங்கணம். நவரத்தினங்கள் போல ஒன்பது நாவல்கள் எழுதியிருக்கிறார், தன் கால்நூற்றாண்டு இலக்கிய வாழ்வில். சிலருடைய எழுத்தை முதலில் வாசிக்கும்போதே இவரெழுதியிருக்கும் அனைத்தையும் வாசித்துவிட வேண்டும் என்று தோன்றும். பாசாங்கில்லாத, பொறுப்பான எழுத்தின் அடையாளம் அது. சந்தேகமில்லாமல் பெருமாள்முருகனின் எழுத்துக்கள் அவ்வகையே.



கங்கணம் என்ற வார்த்தை ஒரு விஷயத்தைக் கிட்டத்தட்டத் தன் வாழ்நாள் குறிக்கோளாக வைத்து அடைவது - அது அபகாரியமோ சுபகாரியமோ - என்ற பொருளில் இன்றும் வழக்கிலிருக்கிறது. 1968 கீழவெண்மணிப் படுகொலையில் முதலில் தண்டனை விதிக்கப்பெற்றுப் பிறகு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு, 1980ல் பழிக்குப்பழி வாங்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அச்சம்பவத்தை சுமார் இருபது வருடங்களுக்குமுன் எனக்கு விளக்குகையில் என் தாத்தா 'பண்ணெண்டு வருஷமா கங்கணங் கட்டிக்கிட்டு இருந்துருக்கானுவோன்னு அப்பத்தான் எல்லாருக்குந் தெரிஞ்சுது' என்று சொன்னது நினைவிலிருக்கிறது. கங்கணம் என்பது ஆண்கள் கையில் அணியக்கூடிய வளையல் போன்ற ஒன்றாகவும், இதைமுடித்த பின்னர்தான் கழற்றுவேன் என்று கட்டிக்கொள்ளும் ஒன்றாகவும் ஆதியில் இருந்திருக்கக்கூடும் என்று ஊகிக்கிறேன். மேற்கொண்டு இதுகுறித்துத் தேடவேண்டும். திருமணத்திற்கு முதல் நாளிரவில் மாப்பிள்ளை கையில் கங்கணம் கட்டிவிட்டுத் தாலிகட்டும் வரை மண்டபத்தைவிட்டு வெளியே போகக்கூடது என்று தடையுத்தரவு போடும் வழக்கம் இன்று நடைமுறையில் இருக்கிறது. இவர் தன் நாவல்களுக்குத் தலைப்புகள் வைக்கும் அழகு அலாதியானது. முதலில் கதைக்கருவுடன் ஏதோ தொடர்பிருப்பது மட்டும் தெரியும். வாசித்தபின் ஏனைய பொருத்தங்கள் வியக்கத்தக்க வகையில் புரியத்துவங்கும். இந்த விஷயத்தை மட்டுமே ஒரு தனிக்கட்டுரையாக எழுதவேண்டிய அளவுக்குச் செய்திகளிருப்பதால் ஒன்பது நாவல்களையும் வாசித்தபின் எழுத உத்தேசித்திருக்கிறேன். இப்போதைக்குத் தலைப்பைக்குறித்து இவ்வளவு போதும்.

பெருமாள்முருகன். (ஒளிப்படம் : காலச்சுவடு)

கொங்குக் கவுண்டர் குடும்பத்தில் பிறந்த மாரிமுத்து தனக்குத் திருமணம் நடத்திக்கொள்வதற்காகக் கங்கணம் கட்டிக்கொண்டு வேலைசெய்ய வேண்டியிருக்கிறது. இருபது வயதில் பெற்றோர் பெண்பார்க்க ஆரம்பித்தபோது கூச்சத்துடன் மறுக்கும் நிலையிலிருந்த அவன் அடுத்த பதினைந்து வருடங்களுக்குத் தனக்கு மணமாகப்போவதில்லை என்பதைக் கனவிலும் நினைத்திருக்கமுடியாது. அரேன்ஜ்ட் மேரேஜ் எனப்படும் இந்த அமைப்பில் எப்படிப் பதினைந்தே நாட்களில் பெண் பார்ப்பது முதல் நிச்சயதார்த்தம் வரை கொண்டுசெல்ல இடமுண்டோ அதே அளவுக்கு பதினைந்து வருடங்களுக்கு இழுத்துச் செல்லவும் வாய்ப்புண்டு என்பது மிகையல்ல. ஜாதி, ஜாதகம், அழகு, படிப்பு, வருமானம், குடும்பப்பின்னணி ஆகியவை அடிப்படைப் பொருத்தங்களாகப் பார்க்கப்படுவது வழக்கம் எனினும் அதையும் தாண்டி வேறு என்னென்ன காரணத்தாலெல்லாம் ஒரு பொருத்தம் அமையாமற் போவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதைப் பட்டியல் போட்டுக் கதையில் நுழைத்திருக்கிறார் ஆசிரியர். அவற்றில் 'அவரு புல்லட்டுல வர்றது எருமக்கடாமேல வர்றமாரி இருக்கு' என்று ஒரு பெண் நிராகரிப்பது முதல் 'வீட்டுக்குப் போனவங்களுக்குக் குடுக்க ஒருவாயி மோருகூட இல்லாத வீடு' என்று ஒரு பெண்ணின் தகப்பன் நிராகரிப்பது வரை சமயங்களில் கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு சம்பவத்துக்குப் பின்னும் அதே காரணத்துக்காக மற்றுமொருமுறை தான் நிராகரிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மாரிமுத்து எடுக்கும் முயற்சிகள் பலனளிப்பினும் புதுக்காரணங்கள் நிராகரிப்பவர்களுக்குக் கிடைத்துக்கொண்டேதான் இருக்கின்றன.

தொழில் முறையிலும், சாதிப் பிடிமானத்தினாலும், நட்பு ரீதியிலும் பலரும் மாரிமுத்துவுக்குப் பெண் அமைத்துவிட எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைகின்றன. கஷ்டத்திலிருக்கும் ஒருத்தருக்கு உதவுவதில் நல்லவேளையாக இது நமக்கு நேரவில்லை என்ற திருப்தியும், நாம் இப்படி உதவிடும் இடத்திலேயே இருந்துவிட்டால் நல்லது என்ற ஏக்கமும் உதவிடுபவர்களுக்கு இருப்பதை ஊடுருவிப் பார்ப்பது  பெருமாள்முருகன் பிராண்ட். ஒரு கட்டத்தில் குடும்பத்தாரிடமோ ஊரார்களிடமோ யாரிடம் எந்தப் பேச்சைத் தொடங்கினாலும் அது தான் இன்னும் கல்யாணமாகலிருப்பதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, கிண்டல்கேலிப் பேச்சாகவோ சொல்வதாக உணர்ந்து மாரிமுத்து கூடுமானவரைத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கிறான். பிறகு தனிமை அப்பேச்சுக்களினும் கொடுமை வாய்ந்ததாக இருப்பதை உணர்கிறான். உடலும் மனதும் அவனை முறைவைத்து அலைக்கழிக்கின்றன. கள் குடிப்பது ஒரு காலத்தில் பிடித்திருந்தபோதிலும் அந்த காரணத்தால் ஒரு பெண் தட்டிப்போனதால் அதையும் தொடுவதில்லை. கடும் உழைப்பாளியான அவனுக்கு ஆறுதல் தருவது - எந்த யோசனைக்கும் இடம் தராது - உடலைக் களைப்படையச் செய்யும் வேலையும் அதனைத் தொடர்ந்த உறக்கமும்தான். 

தன் சாதியில் பெண்கள் குறைவு என்பதும் அதனாலேயே அவர்களுக்கு மவுசு வந்துவிடுகிறது என்பதும் அவனுக்குப் புரிகிறது. அந்தப் பெண்களும் நிறைய படித்துவிடுகிறார்கள்; காடுகரை வைத்து வாழ்க்கை நடத்துபவர்களை அவர்கள் விரும்புவதில்லை. பெண் பிள்ளையெனத் தெரிந்ததும் கலைத்துவிடும் வழக்கம் இந்தச்சாதியில் இருந்ததே இந்த நிலைக்குக் காரணம் எனத் தானாவதித் தாத்தா சொல்லும்போது அவர் கவலையெல்லாம் மாரிமுத்துவுக்குக் கல்யாணமாகுமா என்பதைவிட இப்படியே போனால் இந்தச்சாதி என்னாகும் என்பதுதான். இன்று கிராமத்திலிருந்து வந்து நகரங்களில் தங்கிப் பணிபுரியும் பல இளைஞர்கள் கிராமங்களைப் புகழ்ந்தும், பொதுவாக அடுத்தவர் விஷயத்தில் அக்கறை கொள்ளாத, மனிதர்களை மதிக்காத நகரத்தின் தன்மைகளைப் விமர்சித்தும் சமூக ஊடகங்களில் எழுதுவதை நாம் காணமுடியும். ஆனால் கிராமங்கள்தாம் சாதிப் பிடிமானங்களைக் கொஞ்சமும் வலுவிழக்க சம்மதிக்காமற் காப்பாற்றி வருகின்றன என்பதைப் பெருமாள்முருகன் நாவல்களின் எல்லா கதைக் களன்களுமே தொட்டுக் காட்டிவிடும். காந்தி தன் கிராம ராஜ்ஜியக் கருத்தாக்கத்தை அதன் இயற்கையுடன் ஒன்றுபடக்கூடிய பொருளாதாராத்துக்காக முன்மொழிகையில் அம்பேத்கர் கிராமங்களை ஒழிப்பதே மக்களை முன்னேற்றும் வழி என்று எதிர்மாறாகப் பரிந்துரைத்தது இந்தச்சாதி விஷயத்தின் பொருட்டே. 

வயதாகித் தேய்ந்து இறப்பதன் அனைத்து விவரங்களையும் பாவாத்தாவின் வாழ்க்கையில் இறுதிப்பகுதியாகப் படம்பிடித்துள்ளார். யாருக்கும் கண்ணில் தூசி விழுந்துவிட்டால் அதை நாக்கால் துழாவி எடுத்துவிடும் கலை கைவந்திருந்த பாவாத்தா ஒருநாள் அப்படித் தன்னைத் தேடிவந்த ஒரு பையனுக்கு எடுக்க முயற்சித்துத் தோல்வியடையும்போது தனக்கு வயதாகிவிட்டதை நம்பமுடியாமல் அவள் மனம் தள்ளாட ஆரம்பிக்கிறது.  மறந்து போவது வயதாவதன் சாதாரண அறிகுறியாக இருப்பினும் அதன் உச்சத்தில் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் கலந்துவிடுகின்றன. நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஆழ்மனது, மூளை பலவீனப்படும் இந்த இறுதிக்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வந்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. உச்சமான போதையின் பிடியிலும் இது நிகழ்வதைக் காணலாம். இதை மனதிற்கொண்டே ராமனும் மாரிமுத்துவும் பாறையின் மீதமர்ந்து நிலவொளியில் போதை பாவிப்பதையும், தூரத்தில் கொட்டகையில் பாவத்தா தன் நினைவுகளுடன் மோதிக்கொண்டிருப்பதையும் ஒன்றுடன் ஒன்று கலந்து காட்டியிருப்பதாகத் தோன்றுகிறது. கடைசி நாட்களில் இருப்பவர்களைப் பார்த்துக்கொள்ளும் உறவினருக்கு எப்போதும் ஒரு மனப்போராட்டம் உண்டு; ஆயுள் முழுதும் விரும்பிச்சாப்பிட்டு வந்த சிலவிஷயங்களுக்கு கடைசி நாட்களில் மனது ஏங்கும்போது அது மருத்துவக் காரணங்களுக்காகத் தடை செய்யப்பட்டிருக்கும். அதைத் தந்து மகிழ்ச்சியுடன் அனுப்பிவைப்பதா அல்லது அது இறப்பை விரைவுபடுத்திவிடும் என்பதால் குற்றவுணர்ச்சிக்கு ஆளாவதா என்பதே அது. மாரிமுத்து பாவாத்தாவுக்கு இரண்டாவதைத் தேர்ந்தெடுக்கிறான்.

கல்யாணம் கூடிவரும் கடைசி நூறு பக்கங்களில் விறுவிறுப்பும் ஆழமும் கூடிக்கொண்டே போகின்றன. ஒவ்வொரு சாதிக்கும் திருமண ஏற்பாடுகளில் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் இருக்கும். கொங்குக்கவுண்டர் திருமணத்தின் அம்சங்கள் துல்லியமாகவே பதிவு செய்யப்பட்டுவிட்டதாக நினைக்கிறேன். துணியெடுக்க ஒற்றைப்படையில் ஆட்கள் சேர்ப்பதிலிருந்து, மண்டபம் முன்பதிவுக்குச் உட்சாதிப்பிரிவு (காடை கூட்டம், ஆந்தை கூட்டம் போன்றவை) கொடுப்பதிலிருந்து, விருந்தில் குறை சொல்லப்படாமலிருக்க வேண்டுமானல் என்னென்ன அயிட்டங்கள் இருக்கவேண்டும் என்பதிலிருந்து சகலமும் இருக்கிறது. தாய் கவுண்டர் சாதியானாலும் தகப்பன் பெயர் தெரியாத பெண்ணை மணமுடிக்க நேர்வதால் கல்யாணம் பத்திரிகை எப்படி அடிப்பது என்று குழம்பும் மாரிமுத்து கடைசியில் ஒன்றுவிட்ட தம்பியின் யோசனைப்படி மணமக்கள் இருவரும் தங்கள் திருமணத்துக்குத் தாங்களே அழைப்பதுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கும் நவீன அழைப்பிதழ்கள் இயல்பாக இந்தப்பிரச்சனையைத் தீர்ப்பதைக் கண்டு நிம்மதியடைகிறான். பெண் வீட்டிலிருந்து துணியெடுக்க ஒன்பதுபேர் வந்திருக்கிறார்கள் ஆனால் நாம் ஏழுபேர்தான் இருக்கிறோம் என்று மாரிமுத்துவின் சகோதரி அதைப்பெருத்த அவமானமாகக் கருதி பிரச்சனையைக் கிளப்புகிறாள். இதுமாதிரி சிறுவிஷயங்களால் திருமணம் தட்டிப்போய்க் களைப்படைந்திருக்கும் மாரிமுத்துவுக்கு கோபப்படவும் முடியாமல் எப்படி சமாளிப்பது என்றும் புரியாமலிருக்கையில் அவன் நண்பன் ராமன், "அவங்க அஞ்சு பேருதான். வேற வேலையா வந்த சொந்தங்க நாலுபேரு வர்ற வழியில யதேச்சையா பாத்து அப்படியே மாப்பிள்ளை வீட்டுக்காரங்களையும் பாத்திர்லாம்னு சேந்திருக்காங்க" என்று சூழ்நிலையின் உக்கிரத்தை எளிதாகக் குறைத்துவிடுகிறான். இதுபோன்ற பல நெருக்கடியான சூழ்நிலைகளைத் தன் பாத்திரங்களுக்கு உருவாக்கி அவற்றிலிருந்து மீள அவர்களுக்கு ஒரு வழியும் காட்டி வாசகர்களைச் சற்று ஆசுவாசப்படுத்திவிடுவதில் ஆசிரியர் சமர்த்தர்.



மனிதன் நன்மைக்கென்று கருதி தனக்குத்தானே சமூக அமைப்புகளையும், முறைதளைகளையும் உருவாக்கிக்கொண்டு அதன் நீண்டகால விளைவுகளாகப் பலச் சிக்கல்கள் வரும்போது அதிலிருந்து வெளிவரவும் முடியாமல், மீளவும் முடியாமல் தத்தளிக்கும் அனேக சம்பவங்கள் நாவலாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த அளவில் நாவலின் பல அனுபவங்கள் சராசரித் தமிழர் வாழ்வின் பொது அம்சங்களைப் பிரதிபலிக்கிறது. அதுவே நாவலின் மையக்கரு. மாரிமுத்துக் கவுண்டருக்குப் பெண் அமையாமற் போவதும் அதைச்சுற்றிக் கதை நகர்வதும் ஒரு வசதியான உத்தியே என்பது என் கணிப்பு. 

வெளியீடு: 
அடையாளம்
1205/1, கருப்பூர் சாலை 
புத்தாநத்தம் 621 310
திருச்சி மாவட்டம்முதல் பதிப்பு: 2007
பக். 422. ரூ. 195

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக